காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி போராட்டங்களில் ஏற்படக்கூடிய மோதல்களைத் தடுப்பதற்காக, சம்பவம் நடப்பதற்கு முன்தினம் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட எழுத்துமூலமான அறிவுறுத்தல்களை மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடைமுறைப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு நேற்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றில் உரையாற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், “மே 09 அன்று போர்க்களங்களில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்தினம் சம்பவத்தை தடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மே 09 அன்று அலரி மாளிகையில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக மே 08ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.
எனவே, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் மோதல்கள் ஏற்படக்கூடிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தெரிவித்துள்ளார். எனினும் அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
மே 9ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தனித்துவமான குரல் அடையாளம் காணப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
அதன்பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரீஜென்சி அர்சகுலரத்ன உரையாற்றினார்.
“அலரிமாளிகை கூட்டத்தில் பேச்சாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். நாங்கள் அதைத் தெளிவுபடுத்துகிறோம். ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்பதால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி சனத் ஜயமான்ன, “தேசபந்து தென்னகோன் யாருடைய அனுமதியுடன் நெருப்பையும் பருத்தியையும் சேர்த்தார் என்பதை நாம் அறிய வேண்டும்.
கடந்த 8ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனக்கு கீழ் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கான ஜூம் மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார். ஊர்வலத்தை கலைக்க வேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதனையடுத்து, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கருத்து என்ன என நீதவான் திலின கமகே வினவினார்.
இதற்கு பதிலளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் போராட்டத்தைத் தடுக்க தெளிவான உத்தரவு பிறப்பித்ததற்கான ஆதாரம் இருப்பதால், அவர் சாட்சியா அல்லது சந்தேக நபரா என்று விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும் வழக்கின் பெரும்பாலான சாட்சியங்கள் மேல் மாகாணத்தில் உள்ளதால், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தற்போதைய பதவியில் இருந்து இடமாற்றம் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
குறித்த அறிவுறுத்தல்கள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்த நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் சமமாக சட்டம் அமுல்படுத்தப்படாவிடின் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட ஆறு சந்தேக நபர்களை ஜூன் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.