துனிசியாவில் குடியேற்றவாசிகள் பயணித்த படகு மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எழுபத்தைந்து பேர் காணவில்லை என குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு லிபியாவின் ஜவாரா கடற்கரையில் இருந்து வெளியேறி ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மூழ்கிய படகில் இருந்து 24பேர் மீட்கப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் பங்களாதேஷ், எகிப்து, மொராக்கோ மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் ஆரம்ப எண்ணிக்கை தற்காலிகமானது என்றும் அந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் துனிசிய கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு செய்தி தொடர்பாளர் எஸ்மா ரிஹானே தெரிவித்தார்.
வடக்கு லிபியாவில் உள்ள சுவாராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு படகு புறப்பட்டதாக கூறப்படுகிறது.