பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டி சமநிலையில் நிறைவடைய, இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை வென்றுள்ளது.
டாக்காவில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 141 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 5 விக்கெட்டுகளையும் அசித்த பெனார்டோ 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 506 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 145 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 124 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் சகில் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும் எபொட் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
141 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணிக்கு 28 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அசித்த பெனார்டோவும், தொடரின் நாயகனாக அஞ்சலோ மத்தியூசும் தெரிவுசெய்யப்பட்டனர்.