கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு திமோர் மற்றும் இந்தோனேஷியா, பசிபிக் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ வலையத்துக்கு உட்பட்டது. இது தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு செயற்பாட்டின் வளைவு ஆகும்.
கடந்த பெப்ரவரியில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவைத் தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒரு டசன் மக்களைக் கொன்றது.
2004ஆம் ஆண்டில், சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உட்பட அப்பகுதி முழுவதும் 220,000 பேரைக் கொன்ற சுனாமியைத் தூண்டியது.
கிழக்கு திமோர் 1.3 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இளைய நாடு, சமீபத்தில் இந்தோனேசியாவில் இருந்து சுதந்திரம் பெற்றதன் 20ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.