அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக 10 சுயாதீனக் கட்சிகள் இணைந்து தயாரித்த தீர்மானம் இன்று (புதன்கிழமை) பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன் தலைவர்கள் நேற்று பிற்பகல் கூடி அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது 10 கட்சிகளின் இறுதி உடன்பாடு குறித்து கலந்துரையாடினர்.
சகலரும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், அதற்கேற்ப பிரேரணைகளை பிரதமரிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, “நாங்கள் எங்கள் இறுதி திட்டத்தை தயாரித்துள்ளோம். எங்களின் முன்மொழிவை பிரதமரிடம் சமர்ப்பிப்போம் என நம்புகிறோம்.
தற்போது 21வது திருத்தம் மட்டும் தலைப்பாக இல்லை. இன்று இன்னும் எரியும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நாடு தற்போது பஞ்சத்தில் உள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்திலேயே நாம் இன்னும் இருக்கிறோம். நடுவில் தான் இதன் ஆழத்தையும் தீவிரத்தையும் உணர்வோம்.
எனவே நாங்கள் ஒரு பெரிய திட்டத்திற்கு செல்லலாமா என்று விவாதித்தோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.