தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாக்ஸிங் கவுண்டியில் உள்ளனர்.
சிச்சுவானின் தலைநகரான செங்டுவில் இருந்து தென்மேற்கே 110 கிலோமீட்டர் (65 மைல்) தொலைவில் உள்ள யான் நகரில் 17 கிலோமீட்டர் (10 மைல்) ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், யானிலும் பதிவானது.
சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,400க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் சிச்சுவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தண்டவாளத்தின் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போது, 196பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.