நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து பெரும்போகத்திற்கான அனுகூலங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
மொராண, மஹகல்கமுவ சார் கால்வாய், மஹகோன குளம், விலகண்டிய குளம் மற்றும் கொடிகமுவ குளம் ஆகிய திட்டங்கள் இதற்கு இணையாக ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கடந்த மூன்று நாட்களில் மொத்த மின் உற்பத்தியில் 80 வீத நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
மிதக்கும் சூரியசக்தி பேனல் திட்டங்களை மேம்படுத்தவும் கூரையில் பொருத்தப்படும் சூரியசக்தி பேனல்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகரிக்கவும் நுகர்வோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் யு.டி.சி ஜெயலால் மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.