மிருகக்காட்சி சாலைகளில் உள்ள மிருகங்களுக்கு உணவு கொடுக்க முடியாத அளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமாகி வருகிறது. மிருகங்களுக்கு உணவு வழங்க முடியாத ஓர் அரசாங்கம் மனிதர்களை எப்படி பாதுகாக்கப் போகின்றது ?
தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி “சவுத் சைனா மோர்னிங் போஸ்ற்” என்ற இணைய ஊடகம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அணியும் சுகாதார பாதுகாப்பு நப்கின்ககளின் விலை அதிகரித்த காரணத்தால் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் அவதிப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை தாங்கள் தவிர்ப்பதாக மாணவிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இறக்குமதி செய்யப்படும் நப்கின்களுக்கு அரசாங்கம் 58 விகித வரி அறவிவிடுகிறது. இதனால் வெளிநாட்டு நப்கின்களை வாங்க முடியாத ஒரு நிலைமை. வறிய பெண்கள் பெருமளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நப்கின்களை பயன்படுத்தப்படுவதாகவும்,ஆனால் அவற்றின் விலையும் அதிகரித்திருப்பதால் பல குடும்பங்கள் அவற்றுக்காக காசை செலவழிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.நப்கினா சாப்பாடா என்று கேட்டால் சாப்பாடுதான் முக்கியம் என்று பல குடும்பத்தலைவிகள் கருதுவதாகத் தெரிகிறது.இதனால் நப்கின்கள் இல்லாத காரணத்தால் பல மாணவிகள் பள்ளிக்கூடம் வருவதில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மிகவறிய பெண்கள் விலை கூடிய நப்கின்களை வாங்குவதற்கு பதிலாக சீலைத் துண்டுகளை பயன்படுத்துவதாகவும் அது சுகாதாரமற்றதுநோய் தொற்றுக்கான காரணிகளில் ஒன்று என்று எச்சரிக்கப் பட்டிருக்கிறது.
இதுதான் இலங்கைத்தீவின் இப்போதுள்ள பொருளாதார நிலைமை. ரணில் விக்கிரமசிங்க வந்தபின்னும் நிலைமை மாறவில்லை. அவர் வந்த கையோடு பங்குச்சந்தை மாற்றத்தை காட்டியது.டொலரின் பெறுமதி மாற்றத்தை காட்டியது.அது உடனடிக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை அதிகப்படுத்தியது.ஆனால் அது ஒரு கானல் நீரே என்பதை பின் வந்த நாட்களில் நிரூபித்தன. எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றுக்காக இப்பொழுதும் மக்கள் நாட்கணக்காக வரிசையில் நிற்கிறார்கள். நாட்டில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் எப்பொழுது திறக்கப்படுகின்றன என்பதே ஒரு செய்தியாகிவிட்டது. கொழும்பு,நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் எரிவாயு கேட்டு ஆறு நாட்களாக கூடாரம் அமைத்து போராடி வருகிறார்கள்.பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் பால்மா கிடைப்பதில்லை.கிடைத்தாலும் விலை அதிகம்.
க. பொ.த.சாதாரண தரப்பரீட்சையை முன்னிட்டு மின் வெட்டு நிறுத்தப்பட்டது. எனினும் பரிட்சை முடிந்த பின்னரும் ஒப்பீட்டளவில் குறைந்தளவு நேரமே மின் வெட்டடப்படுகிறது. முன்னே வாரங்களோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் பெட்ரோலுக்காக வரிசையில் நிற்கும் தேவை குறைந்துவிட்டது.ஆனால் டீசலுக்கு நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.ரணில் விக்ரமசிங்க பொருளாதார ரீதியாக மக்களுக்கு நம்பிக்கையூட்டியதை விடவும், அரசியல் ரீதியாக மேற்கு நாடுகளுக்கு நம்பிக்கையூட்டியதே அதிகம் எனலாம்.
அரச நிர்வாகத்தை ராணுவ மய நீக்கம் செய்ய வேண்டும் என்பது மேற்கு நாடுகளின் கோரிக்கையாக காணப்பட்டது. ஐ எம். எஃப்பின் நிபந்தனைகளில் அதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது. ராணுவ மய நீக்கம் செய்வது என்பது ஒரு கொள்கை முடிவு. கோத்தாபய ஜனாதிபதியாக இருக்கத்தக்கதாக அப்படி ஒரு கொள்கை முடிவை ரணில் எடுக்க முடியாது. தவிர அவர் அவ்வாறு ஒரு கொள்கை முடிவை எடுப்பாரா என்பதும் கேள்விதான். ஏனெனில் அவருடைய நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக்காலத்திலும் முழு அளவுக்கு ராணுவமய நீக்கம் நிகழவில்லை. இப்பொழுதும் சிறிதளவு மேலோட்டமான மாற்றங்களை செய்துவிட்டு அவர் மிகுதியைச் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரம் தன்னிடம் இல்லை என்று கையை விரிக்கலாம்.பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருக்கிறார் என்றும் சொல்லலாம்.எனினும் அமைச்சுக்களின் செயலர்களாக இருந்த ராணுவத் பிரதானிகள் சிலரை மாற்றியிருக்கிறார். இதன்மூலம் மேற்கு நாடுகளுக்கு ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதாக ஒரு தோற்றத்தை அவர் காட்டுகிறார்.
அப்படித்தான் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. இவை போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் சட்டம் நீதி என்பன ஒழுங்காக உள்ளன என்று காட்ட அவர் முயற்சிக்கிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக இருபத்தியோராவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வைக்கப்போவதாக ஒரு எதிர்பார்ப்பை அவர் கட்டி எழுப்பி வருகிறார். ஐஎம்எப் உட்பட மேற்கு நாடுகள் எதிர்பார்ப்பது ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்களும் அதைத்தான் கேட்கிறார்கள். ஆனால் ஜனாதிபதியை பதவி நீக்காமல் அதற்கு பதிலாக அவருடைய பதவிக்குரிய அதிகாரங்களை குறைத்து அவரை ஒரு சம்பிரதாயபூர்வ ஜனாதிபதியாக மாற்றி விடுவதன் மூலம், மேற்கு நாடுகளையும் எதிர்க் கட்சிகளையும் காலிமுகத்திடலில் போராடும் இளைய தலைமுறையையும் தாக்காட்டலாம் என்று ரணில் எதிர்பார்க்கக் கூடும்.
எனினும் அதற்கும் கூட அதிகம் தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்பதைத்தான் ஆளுங்கட்சியின் கூட்டு மனோநிலை உணர்த்துகின்றது. ஆளுங்கட்சியை இப்பொழுதும் பசில் ராஜபக்சதான் திரைமறைவில் இருந்தபடி இயக்குகிறார் என்று கருதப்படுகிறது. எனவே ராஜபக்சக்களை முழுமையாகப் பலவீனப்படுத்தும் ஒரு 21ஆவது திருத்தத்திற்கு ஆளுங்கட்சி தயாரா என்ற கேள்வி உண்டு.
ஆனால் 21 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியை பலவீனப்படுத்தவில்லை என்றால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது சவால்கள் மிகுந்ததாக இருக்கும்.
மேற்கு நாடுகளும் ஐஎம்எப் போன்ற நிறுவனங்களும் நெருக்கடியான இத்தருணத்தில் இலங்கை மீதான தமது பிடியை மேலும் இறுக்குவதற்கு முயற்சிக்கின்றன.எனவே எதுவிதத்திலாவது ராஜபக்சக்களை அதிகாரமற்றவர்கள் ஆக்கவேண்டும் என்று மேற்படி தரப்புக்கள் சிந்திக்கின்றன.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால்,ஒரு ஆட்சி மாற்றத்தை போன்ற ஒரு மாற்றம்.2015ஆம் ஆண்டு மேற்கு நாடுகளும் இந்தியாவும் அவ்வாறான ஒரு மாற்றத்தைத்தான் பின்னிருந்து இயக்கின.இப்பொழுதும் ரணில் விக்கிரமசிங்கவை வைத்துக்கொண்டு அவ்வாறான ஒரு மாற்றத்தை நோக்கி காய்கள் நகர்த்தப்படுகின்றன.
அதாவது நாட்டுக்குள் போராடிக்கொண்டு இருப்பவர்களையும், எதிர்க்கட்சிகளையும், அதேசமயம் நாட்டுக்கு வெளியே மேற்கு நாடுகளையும் ஐஎம்எப் போன்ற அமைப்புகளையும் திருப்திப்படுத்தும் விதத்தில் ரணில் விக்கிரமசிங்கவை முன்நிறுத்தி ராஜபக்சக்கள் மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார்கள். உண்மையில் இம்மாற்றங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னரே தொடங்கிவிட்டன. பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வரும் பொழுதே அவை செயல் பூர்வ வடிவத்தை அடைய தொடங்கிவிட்டன. பசில் ராஜபக்ச தொடக்கிவைத்த வெளியுறவு அணுகுமுறை மாற்றங்களின் விளைவுகளை அவற்றின் அடுத்தடுத்த கட்டத்துக்கு ரணில் கொண்டு போகிறார் என்பதே உண்மை.
இந்தஅடிப்படையில் சிந்தித்தால் 21ஆவது திருத்தம் என்பது ராஜபக்சக்களைப் பலவீனப்படுத்தி அதன்மூலம், ஒரு ஆட்சி மாற்றத்தை ஒத்த ஒரு சூழலை உருவாக்குவதே ரணில் கோத்தாபய இணைவின் நோக்கமாகும். அதன்மூலம் காலிமுகத்திடலில் போராடும் தரப்புகளையும் சமாதான படுத்தலாம். எதிர்க்கட்சிகளை சமாதான படுத்தலாம் அல்லது பலவீனப்படுத்த லாம். சஜித் பிரேமதாசவை பலவீனப் படுத்தலாம். மேற்கு நாடுகளை திருப்திப்படுத்தலாம். ஐ.எம்.எஎஃப் ஐ திருப்திப்படுத்தலாம்.ஆனால் தமிழ் மக்களை?
தமிழ்மக்கள் கேட்பது ஒரு யாப்பு திருத்தத்தையோ அல்லது ஆட்சி மாற்றத்தையோ அல்ல.தமிழ்மக்கள் கேட்பது ஓர் அடிப்படையான கட்டமைப்புசார் மாற்றத்தை. அதாவது ஒரு புதிய யாப்பை.யாப்புத் திருத்தத்தை அல்ல. இப்போதுள்ள ஒற்றையாட்சி யாப்பை அகற்று, பதிலாக பல்லினத்தன்மை மிக்க ஒரு கூட்டாட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.
அதேசமயம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைப் பொறுத்தவரை யாப்பு மாற்றம் என்பது ஒரு தொடக்கம் அல்ல. தொடக்கம் எதுவென்றால் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான ஒரு பேச்சுவார்த்தை ஆகும். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஓர் உடன்படிக்கை எட்டப்பட வேண்டும். அந்த உடன்படிக்கையில் இறுதிசெய்யப்பட்ட ஒரு தீர்வை ஒரு சட்டப்பிரயோக வடிவத்துக்கு கொண்டுவருவதுதான் யாப்பு. இதுதொடர்பாக தமிழ் மக்கள் பேரவை ரணில் விக்கிரமசிங்கவின் யாப்புருவாக்க குழுவிற்கு வழங்கிய பரிந்துரையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அயர்லாந்தில் கையெழுத்திடப்பட்ட பெரிய வெள்ளி உடன்படிக்கை போல ஒரு அரசியல் உடன்படிக்கை முதலில் கையெழுத்திடப்பட வேண்டும்.அந்த உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வுக்கு ஏற்றாற்போல யாப்பை மாற்ற வேண்டும்.அவ்வாறு ஒரு உடன்படிக்கை எழுதப்படுவதற்கு ஒரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம்.இப்பொழுது இலங்கைத்தீவை பிணை எடுக்க முற்படும் தரப்புக்கள் அவ்வாறு மத்தியஸ்தம் வகிக்குமா ?
எனவே இப்பொழுது தென்னிலங்கையில் நிகழும் இருபத்தியோராவது திருத்தத்தின் மீதான விவாதங்களில் தமிழ் மக்கள் அளவுக்கு மிஞ்சி தொங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.இதுபோன்ற திருத்தங்களால் காலிமுகத்திடலில் போராடும் தரப்புக்கள் திருப்திப்படுமோ இல்லையோ, அல்லது எதிர்க்கட்சிகள் திருப்திப்படுமோ இல்லையோ,அல்லது மேற்கு நாடுகள் ஐ.எம்.எப். போன்ற தரப்புக்கள் திருப்திப்படுமோ இல்லையோ,நிச்சயமாக தமிழ் மக்கள் திருப்திப்படமாட்டார்கள்.