இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி கடந்த மாதம் 19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நிலவும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கி தனியார் பேருந்துகள் பேருந்துகளை இயக்குவதில்லை என தீர்மானித்தமையால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை வேன் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.