உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என ஐக்கிய தொழிற்சங்க அமைப்பின் ஊடகப் பேச்சாளர் (Samagi United Trade Union Force) ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
மே 24ஆம் திகதி மின்சக்தி அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலையேற்றம் இருக்கும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எனவே மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கருத்தின் பிரகாரம், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, மே மாதம் 24 ஆம் திகதி விலையில் திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டது.
தற்போதைய எரிபொருள் விலை சூத்திரம் மறைந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தியதைப் போன்றது. இது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆனால் தற்போதைய சூத்திரத்தின்படி எரிபொருள் விலை உலக சந்தை விலைக்கு ஏற்ப அமலுக்கு வரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.