டொமினிகன் குடியரசின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர், நெருங்கிய நண்பரால் அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
55 வயதான ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா, தாக்குதல் நடந்த நேரத்தில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
தாக்கியவரை மிகுவல் குரூஸ் என ஜனாதிபதியின் பேச்சாளர் அடையாளம் காட்டினார், அவரை அமைச்சரின் பால்ய நண்பர் என அவர் வர்ணித்தார். ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா மீது ஆறு முறை சுடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஜோர்ஜ் மேராவின் குடும்பத்தினர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘இதைச் செய்த நபரை எங்கள் குடும்பம் மன்னிக்கிறது. ஆர்லாண்டோவின் மிகப் பெரிய மரபுகளில் ஒன்று பகை கொள்ளாமல் இருப்பது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.