இலங்கை மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் துவண்டு போயுள்ள இலங்கை மக்களுக்கு, கவலையை மறந்து புத்துயிர் பெறும் நோக்கில் திட்டமிடப்பட்ட இந்த போட்டித் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகின்றது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வந்துள்ள அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, இன்று இலங்கை அணியுடன் தனது முதலாவது ரி-20 போட்டியில் விளையாடுகின்றது.
இப்போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தசுன் சானகவும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்குகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ஷ, துஸ்மந்த சமீர, மகேஷ் தீக்ஷன மற்றும் மகேஷ் பத்திரன ஆகியோர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். ரி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய புத்துணர்வுடன் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
இதுதவிர, தசுன் சானக, சாமிக கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸின் பங்களிப்பு அணிக்கு மிக முக்கியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நடப்பு ரி-20 உலகக்கிண்ண சம்பியன் அணியான அவுஸ்ரேலிய அணிக்கு, இலங்கை அணி கடும் சவால் அளிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை வந்துள்ள அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, மூன்று ரி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.