மின்கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதைவிட, மின்சார உற்பத்திக்கான செலவைக் குறைப்பதே சிறந்ததாக இருக்கும் என மின்சக்தி- எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மின்சார சபையானது மின்கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு எம்மிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
உற்பத்தி செலவு, நிர்வாகச் செலவு உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு இதனை செயற்படுத்துமாறு அவர்கள் கோரியுள்ளார்கள்.
756 பில்லியன் ரூபாய் ஒரு வருடத்திற்கு இவற்றுக்காகத் தேவைப்படும் நிலையில், தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்திற்கு இணங்க, ஒரு வருடத்திற்கு வெறும் 250 பில்லியன் ரூபாயளவிலேயே கிடைக்கிறது.
அதாவது 500 பில்லியன் ரூபாயளவில் மேலதிகமாகத் தேவைப்படுகிறது.
இதனை நிவர்த்தி செய்யவே மின்சார சபையானது மின்கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறுக் கோரியுள்ளது.
அப்படி திருத்தங்களை மேற்கொள்வதாயின், மின்கட்டணத்தை பாரியளவில் உயர்த்த வேண்டிய நிலைமைக் காணப்படுகின்றது.
ஆனால், இந்த விடயம் தொடர்பாக எனது நிலைப்பாடானது, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை விட, உற்பத்தி செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதாகும்.
ஒரு அலகுக்கான உற்பத்தி செலவானது சாதாரணமாக 48.50 ரூபாயாகக் காணப்படுகின்றது.
நீர் மின்சாரத்திற்கு ஒரு அலகுக்கான உற்பத்தி செலவாக 4.37 ஆக காணப்படுகிறது. சூரிய ஒளி மின்பிறப்பாக்கிக்கான ஒரு அலகுக்கு 16 ரூபாய் செலவாகின்றது. ஆனால், டீசல் ஊடான மின் உற்பத்திற்கு ஒரு அலகுக்கு 182 ரூபாய் தேவைப்படுகிறது.
நிலக்கரியின் விலையும் அதிகரித்துள்ளமையால், நிலக்கரி ஊடான மின்சார உற்பத்திக்கும் ஒரு அலகுக்கு 40 ரூபாய் செலவாகின்றது.
எனவே, நாம் சூரிய ஒளி ஊடான மின்உற்பத்திக்கே அதிகளவில் செல்ல வேண்டிய நிலைமைக் காணப்படுகின்றது.
அப்போது தான், உற்பத்தி செலவை குறைந்தது 20 ரூபாயாகவேனும் குறைக்க முடியும்;. எனத் தெரிவித்தார்.