முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரூ இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த மனுவைத் தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து சி.ஐ.டியினர் கடந்த ஒரு வாரமாக அவரை வலைவீசி தேடிவருகின்ற போதும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.