பயணிகளை கவரும் வகையில் மிகவும் ஒழுங்கான மற்றும் தரமான பொது போக்குவரத்து சேவையை பேணுவதற்கு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான பணிப்புரைகளை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை இரவு வேளைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பார்க் அன்ட் டிரைவ் அமைப்பை விஸ்தரிப்பதற்கும் பார்க்கிங் கட்டணங்களைக் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராயுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அலுவலக சேவைகளை இலக்காக கொண்டு புதிய ரயில் சேவைகளை தொடங்கவும், தற்போதுள்ள ரயில்களுக்கான பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.