சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனைப் பெறுவதற்கு இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடு இலகுவானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.
கடன் குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அநேகமாக அதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பணம் பெற முடியாது. பணத்தைப் பெறுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் தேவை. அதைச் செய்ய நிறைய வேலைகள் தேவைப்படும்.
அதாவது நிதி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எளிமையாகச் சொன்னால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் கடன்களை மறுசீரமைக்கும் ஒரு நேர்மறையான திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். அது எளிதானது அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.