எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம்(15) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதனிடையே தமக்கான எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே தெமட்டகொட பகுதியில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கொழும்பு பேஸ்லைன் வீதியில் இன்று முற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி காலி வீதி தெஹிவலை பகுதியில் வீதியை மறித்தது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கொழும்பு – பஞ்சிகாவத்தை பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் குருணாகல், வவுனியா, மன்னார், பதுளை, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் எரிபொருள் கோரி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
இதனிடையே எரிபொருள் இன்மையால் ஹட்டனிலிருந்து காலி மற்றும் கொழும்பு நோக்கி செல்லும் பேருந்து சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையினால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா ஆகிய பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் இடம் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபட்டதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கான விசேட பேருந்து சேவையை ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை மாத்திரம் சாதாரண பேருந்து கட்டணத்தின் கீழ் ஏற்றிச் செல்வதற்காக தனியார் பேருந்துகளை பயன்படுத்தி இந்த விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.