நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவை நிறுத்தி, இதற்கு முன்னர் இலங்கைக்கு எரிவாயு விநியோகித்த ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாகவே சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சியாம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதை விடவும், ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்யும் போது, ஒரு மெற்றிக் தொன்னிற்கு 34 டொலரை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவு ஆரம்பிக்கப்படுமாயின், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது.
இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 500 ரூபாய் நட்டத்திலேயே தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.