பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் இன்று திங்கட்கிழமை காலை கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு நிதி உதவியை வழங்கும் வகையில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட குறித்த குழு இலங்கை வந்துள்ளது.
அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்து பேசுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு, ஜூன் 30 ஆம் திகதி வரை கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் தமது கொள்கைகளுக்கு இணங்கினால் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் என தனது உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
அதன்படி முன்னதாக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் தலைமையிலான பொருளாதார குழுவுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து குறித்த குழு தற்போது கலந்துரையாடலை நடத்தி வருகின்றது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, பிரச்சினைகளை சமாளிக்க சுமார் 5 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நித்தியத்திடம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.