எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வார நாடாளுமன்ற அமர்வை இன்று (புதன்கிழமை) மாத்திரம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் இந்த வாரம் நேற்றிலிருந்து 24 ஆம் திகதி வரை கூடும் என முன்னைய நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து, இன்று விவாதிக்கப்படவுள்ள தற்போதைய சுகாதார பிரச்சினைகள் குறித்த விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நாடாளுமன்றம் ஜூலை 4ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளதாக தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்க முடியாத 50 கேள்விகளுக்கு முற்பகல் 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை முழு நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து வெற்றிடமாகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.