ஜே.வி.பி.யை இணைத்துக்கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சுயேச்சைக் கட்சிகளின் 11 தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதியும் பிரதமரும் பிளவுபட்டால் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வாசுதேவ நாணயக்கார, “ஜனாதிபதியும் பிரதமரும் தற்போதைக்கு பிளவுபடவில்லை. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரணிலின் பதவி பறிபோகும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால், ஜே.வி.பியுடன் இணைந்து சஜித் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர் பிரதமராக விரும்புகின்றார்.
அவ்வாறு அனைத்துக்கட்சி அரசு அமைக்கப்பட வேண்டுமானால், அதன் கொள்கையும், நடவடிக்கையும் மட்டுமே எங்களுக்கு முக்கியம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.