நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443 பேரை இன்னும் காணவில்லை என நைஜீரிய சீர்திருத்த சேவையின் செய்தித் தொடர்பாளர் உமர் அபுபக்கர் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிலர் தாங்களே பொலிஸ் நிலையங்களில் சரணடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தப்பியோடிய அனைத்து கைதிகளையும் கண்காணித்து, அவர்களை அதிகாரிகள் காவலில் வைப்பார்கள் என அபுபக்கர் மேலும் கூறினார்.
செவ்வாய்கிழமை இரவு அபுஜாவில் உள்ள குஜே உச்ச சிறைச்சாலை இஸ்லாமிய தீவிரவாத கிளர்ச்சியாளர்களால் (போகோ ஹராம்) உடைக்கப்பட்டது. இரவு 10 மணியளவில் வெடி சத்தங்களும் துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜே அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 1,000 கைதிகள் இருந்தனர், இதில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் 64 சந்தேக நபர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு சிறைச்சாலையை பார்வையிடட்ட நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த தாக்குதலால் தான் வருத்தமடைந்ததாகவும், நைஜீரியாவின் புலனாய்வு அமைப்பு குறித்து ஏமாற்றம் அடைந்ததாகவும் பதிவிட்டார்.