இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக உலக உணவுத் திட்டம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள் அவசர உணவு, போஷாக்கு மற்றும் பாடசாலை உணவைப் பெற இலக்கு வைத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டின்படி, பத்தில் மூன்று குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான உணவுகளை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
தோட்டப் பகுதியில் வாழும் மக்களிடையே உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளதென்றும் அங்கு பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சமாளிக்கும் உத்திகளின் அனைத்து நடவடிக்கைகளிலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களைவிட இந்த குடும்பங்கள் தொடர்ந்து மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.