பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(08) முதல் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல மாதங்களுக்கு முன்பே இந்த விடயம் தொடர்பில், அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், நாளை நண்பகல் 12 மணிமுதல் சேவைக்கு சமுகமளிக்கப்போலதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.