ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்ட ஆணையின்படி, அனைத்து உக்ரைனியர்களும் இப்போது ரஷ்ய குடியுரிமைக்கு விரைவாக விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக, இந்த விருப்பம் உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், தெற்கு ஸபோரிஸியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே திறந்திருந்தது. அவை பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆனால், தற்போது உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்ய குடியுரிமைக்கு எத்தனை பேர் விண்ணப்பிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 2019ஆம் ஆண்டுக்கு இடையில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியிருப்பாளர்களுக்கு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில், உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 18 சதவீத மக்கள் ரஷ்ய கடவுச்சீட்டைப் பெற்றுள்ளனர்.
மே மாதத்தில், இந்த திட்டம் ஸபோரிஸியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில், புடினின் ஆணை குறித்து உக்ரைனிய அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.