ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில், ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியானது, 2025ஆம் ஆண்டு அடுத்த தேர்தல் வரை பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசாங்கத்தின் முடிவுகளை தடையின்றி நிறைவேற்றுவதற்கு வழிவகுத்துள்ளது.
இதில் மொத்தம் உள்ள 248 இடங்களில், ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக் கூட்டணி 146 இடங்களைப் பெற்றது. அபே படுகொலை செய்யப்பட்டது ஆளும் கட்சிக் கூட்டணிக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஜப்பானில் மேலவைக்கு குறைவான அதிகாரமே உள்ளது. எனினும், இந்த வெற்றி கிஷிடாவின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் கிஷிடா முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு இந்த வெற்றி உதவும் என கூறப்படுகிறது.
இந்த வெற்றி மூலம் தேசிய பாதுகாப்பு, ‘புதிய முதலாளித்துவ’ பொருளாதாரக் கொள்கை போன்ற நீண்டகால கொள்கைகளில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தடையின்றி பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறைந்த அதிகாரம் கொண்ட ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளரை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே சுட்டுக் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத வாக்குகள் பதிவாகின.