சர்வகட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி.யையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் மீண்டும் அதே போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து, ஜனாதிபதி பதவிக்கு பல பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தயாசிறி தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே தனது பெயரை அறிவித்துள்ளார் என்றும் ஏனைய குழுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த சூழ்நிலையில் அவர்களில் ஒருவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த வேட்பாளர்களில் யாரேனும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ‘கோட்டா கோ கம’ செயற்பாட்டாளர்களின் ஆதரவைப் பெற முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இரு வேட்பாளர்களையும் அவர்கள் நிராகரிக்கும் பட்சத்தில் அடுத்த விருப்பத்தை ஆராய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறுகிய காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக பதவியேற்று நாட்டை நிர்வகிப்பதற்காக பிரதமரை நியமிப்பதே அடுத்த தெரிவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.