பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டமான மிராலியில் உள்ள காதி சந்தைக்கு அருகில் பாதுகாப்புப் படையினரின் தொடரணி மீது தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பாதுகாப்புப் வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு வஜிரிஸ்தானின் துணை ஆணையர் ஷாஹித் அலி கானின் தொடரணியானது மிராலியில் இருந்து மாவட்டத் தலைமையகமான மிரம்ஷாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி வாகனம் ஒன்றின் அருகே தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் மூன்று பணியாளர்கள் பலத்த காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக பன்னு காரிஸனில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய ஏழுவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
தாக்குதல் நடந்த உடனேயே, பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதோடு மிராலி-மிரம்ஷா சாலை மூடப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஒரு மாதத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக, வடக்கு வஜிரிஸ்தானின் ரஸ்மாக், டோசாலி பகுதியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல குழந்தைகள் காயமடைந்தனர்.
காலவரையற்ற போர்நிறுத்தத்தை அறிவித்துள்ள தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக எல்லைப் பகுதிகளில், குறிப்பாக வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.