அடுத்த ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் உறுதுணையாக இருக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸாரும் இராணுவத்தினரும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவி விலகல் இடம்பெறும் என சபாநாயகர் தமக்கு அறிவித்ததாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இராஜினாமாவுடன் அடுத்த ஜனாதிபதியை நியமிக்கும் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் சபாநாயகருடன் கலந்துரையாடியதாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை நாட்டின் அமைதிக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது அல்லது தனியார் சொத்துக்களை அழிக்காமல் அமைதியை நிலைநாட்ட உதவுமாறுவும் அவர் கோரியுள்ளார்.