இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும் தவிர, டலஸ் அழகப் பெரும,சரத் பொன்சேகா,அனுரகுமர,அனுரா பிரியதர்சன யாப்பா போன்றவர்களும் போட்டியிடுவதில் நாட்டத்தோடு காணப்படுகிறார்கள். சம்பிக்க ரணவக்கவிற்கும் அந்த ஆசை இருப்பதாக கருதப்படுகிறது
ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராஜபக்சக்களை அவர் பாதுகாக்கிறார்.எனவே ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாப்பார்கள். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும். ஆனால் இங்கே உள்ள பிரச்சினை என்னவென்றால், பொது ஜன பெரமுன அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த போது இருந்த அதே வடிவத்தில் இப்பொழுது இல்லை.பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்தபொழுது அக்கட்சிக்குள் உடைவு ஏற்பட்டது.அது இப்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இழந்துவிட்டது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் இப்பொழுதும் ஒப்பீட்டளவில் பலமான கட்சி அதுதான்.
எனினும் யார் அடுத்த ஜனாதிபதி என்ற விடயத்தில் பொதுஜன பெரமுன்னவுக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதைத்தான் ஜி.எல்.பீரிசின் கருத்துக்கள் காட்டுகின்றன.ஜி.எல்.பீரிஸ்,டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பதாகக் கருதப்படுகிறது. அவருக்கு பிரதமராக வரும் கனவு உண்டு என்றும் கருதப்படுகிறது. மேலும் அவருடைய ஜாதகத்தில் ராஜயோகம் இருப்பதாகவும், எனவே பிரதமராக வரும் வாய்ப்புகள் அவருக்கு உண்டு என்று ஜோதிடர்கள் ஆலோசனை கூறியதால் அவருக்கு அப்படி ஒரு ஆசை அதிகரித்திருப்பதாக அரசல் புரசலான ஒரு தகவல் உண்டு. எனவே பொதுஜன பெரமுனவின் இப்போது இருக்கும் வடிவத்தில் அதன் முழு வாக்குகளும் ரனிலுக்கு கிடைக்கப் போவதில்லை.அதாவது அவர் சாதாரண பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு உழைக்க வேண்டி இருக்கும். ஆட்களை வளைத்துப் போட வேண்டி இருக்கும். பேரம் பேச வேண்டி இருக்கும். டீல்களுக்குப் போக வேண்டி இருக்கும். புதிய கூட்டுக்களுக்குப் போக வேண்டி இருக்கும். இதையெல்லாம் செய்து தலைகீழாக நின்று அவர் வாக்குகளை பெற வேண்டியிருக்கும்.ரகசிய வாக்கெடுப்பு என்பதும் அவருக்குச் சாதகமானது.
எனினும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்குமாக இருந்தால் அவருக்கு எதிராக விழக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை சிதறடிக்கப்படும். இது தவிர்க்க முடியாதபடி ரணிலை வாக்கெடுப்பில் வெற்றி பெற வைக்கக் கூடும்.
நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள நிலவரம் என்று எதனையுமே திட்டவட்டமாக தெளிவாகக் கூற முடியாதுள்ளது. கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலான அரசியல் குழப்பங்களின் காரணமாக நாடாளுமன்றம் ஏறக்குறைய செயல் இழந்து விட்டது. பொதுஜன பெரமுன உட்பட எல்லாக்கட்சிகளும் கட்டுக்கோப்பாக இல்லை. அவை முன்பு இருந்த வடிவத்தில் இப்பொழுது இல்லை. இதனால் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை பேர் உண்டு என்பதனை திட்டவட்டமாகக் கூற முடியாத ஒரு நிலை.நடக்கவிருப்பது ரகசிய வாக்கெடுப்பு,அதனால்,இனிவரும் நாட்கள் இலங்கைதீவின் அரசியல் வரலாற்றில் அதிகம் பேரம்பேசல்கள் இடம்பெறப் போகும் நாட்களுக்குள் அடங்கும். எனவே இதில் யார் யார் எங்கே நிற்பார்கள் யாரோடு போவார்கள் என்பதனை அறுதியிட்டுக் கூறுவது கடினம்.அது ஞானக்காவுக்கும் தெரியாது, வேறு எந்த ஜோதிடருக்கும் தெரியாது. பணப்பெட்டிகளை பரிமாறும் முகவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இவ்வாறான ஒரு பின்னணியில், சஜித் அணி, ரணிலை வெல்வதாக இருந்தால் ஏனைய கட்சிகளோடு குறிப்பாக ரணிலுக்கு எதிராக நிற்கும் கட்சிகளோடு கூட்டுக்களை உருவாக்க வேண்டிவரும். அவ்வாறான ஒரு கூட்டுக்கான முன் முயற்சிகள் கடந்த வியாழக்கிழமை வெற்றி பெற்றதாக அவதானிக்கப்பட்டது. அதன்படி சஜித் அணியும் பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து வந்த சக்திகளும் இணைந்து ஒரு புதிய கூட்டை உருவாக்கி யார் பிரதமர் யார் ஜனாதிபதி என்பதில் தங்களுக்கு இடையே ஒரு புரிந்துணர்வுக்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டலஸ் மற்றும் சஜித் இருவருக்கும் இடையே ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பகிர்வது என்றும் ஓர் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல். ஆனால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சஜித் அணி அந்த உடன்பாட்டில் இருந்து பின்வாங்கியதான ஒரு தோற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள கட்சி நிலவரங்களின்படி சஜித் அணியும் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய அணிகளும் இணைந்து ஒரு உடன்பாட்டுக்கு வந்தால் ரணிலை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம். தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் மலையக பிரதிநிதிகளும் இணைந்தால் அந்த நெருக்கடி மேலும் பலமானதாக மாறும். ஆனால் அவ்வாறான ஒரு கூட்டணிவுக்கு போகக் கூடிய வாய்ப்புகள் இக்கட்டுரை எழுதப்படும் நால்வரையிலும் காணப்படவில்லை.
இப்போதுள்ள நிலைமைகளின்படி, ரணிலுக்கு எதிரான தரப்புகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படவில்லை.அவ்வாறு குறைந்தபட்ச ஐக்கியத்தை உருவாக்க தவறினால் வாக்கெடுப்பின் போது ரணிலுக்கு எதிரான வாக்குகள் எவ்வளவுக்குச் சிதறுமோ, அவ்வளவுக்குஅவர் வெற்றிக்கு கிட்ட வருவார்.
அவரை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவது என்று தீர்மானித்திருக்கும் சக்திகள் இடையில் உள்ள மிகச்சில நாட்களுக்குள் வேகமாக செயல்படும். புதிய பேரங்கள், புதிய டீல்கள் இடம்பெறும். பணப்பெட்டிகள் பரிமாறப்படும். தவிர,பொதுமக்கள் மத்தியில் ரணிலை ஸ்தாபிக்க முற்படும் நாடுகள் அவசர அவசரமாக உதவிகளை வழங்கும். ஏற்கனவே சமையல் எரிவாயு ஒரு தொகுதி வந்துசேர்ந்து விட்டது.எரிபொருள் வந்து கொண்டிருக்கிறது.எரிவாயு,எரிபொருள்,மின்வெட்டு போன்றவற்றில் மாற்றங்களைக் காட்டினால்,அது பொதுமக்களின் கூட்டுஉளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் போராட்டங்களுக்கு ஆதரவு குறையும். ரணிலை நோக்கிய எதிர்பார்ப்பு ஒன்று வளர்த்தெடுக்கப்படும். இவை எல்லாவற்றினதும் தொகுக்கப்பட்ட விளைவுகள்தான் அவர் வெல்வாரா இல்லையா என்பதனை தீர்மானிக்கப் போகின்றன.
ஆனால் அதில் வெற்றி பெற்றாலும் அவரை அகற்றுவது என்று காலி முகத்துடலில் போராடும் தரப்புக்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. கோத்தா கோகமவை அவர்கள் ரணில் கோகமவாக மாற்றி இருக்கிறார்கள். எனவே ரணிலுக்கு எதிராக புதிய எழுச்சிகளை எதிர்பார்க்கலாம்.
இந்த விடயத்தில் ரணிலே விடவும் டலஸ் அழகப்பெரும சாதகமான அம்சங்களை கொண்டிருப்பதாக அவதானிகள் கருதுகிறார்கள்.கோட்டா கோகமவில் இருப்பவர்களும் அரகலிய என்று அழைக்கப்படும் போராட்டக் கட்டமைப்பும் டலஸ் அழகப்பெருமவை அதிகம் விரோத பாவத்தோடு அணுகவில்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.இந்தத் தகைமை காரணமாக டலஸ் போட்டியில் அதிகம் எதிர்பார்ப்போடு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனினும்,இந்த வாக்கெடுப்பின் முடிவை தீர்மானிப்பது உள்நாட்டு சக்திகள் மட்டுமல்ல,இலங்கைத் தீவின் அடுத்த ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதனை தீர்மானிக்க விரும்பும் எல்லா வெளிச் சக்திகளும் இக்குறுகிய நாட்களுக்குள் தீவிரமாகச் செயல்படும்.எனவே இவை எல்லாவற்றினதும் திரட்டப்பட்ட விளைவு எதுவென்பது இருபதாம் தேதி பெரிய வரும்.
ஆனால் இக்கட்டுரையின் குவிமையம் அதுவல்ல. அதைவிட ஆழமானது.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலான மக்கள் எழுச்சிகளின் விளைவாகத்தான் இப்பொழுது ஒரு புதிய இடைக்கால ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு இடம்பெறவிருக்கிறது. கடந்த மூன்றுமாத காலத்தில் நிகழ்ந்த பெரிய மாற்றங்கள் அனைத்தும் யாப்புக்குள் நிகழவில்லை.யாப்பின் பிரகாரம் நிகழவில்லை. யாப்பின் பிரகாரம் பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் பலமான கட்சி.யாப்பின் பிரகாரம் மகிந்த பலமானவர்.யாப்பின் பிரகாரம் கோத்தா நிறைவேற்று அதிகாரம் உடையவர்.ஆனால் யாப்புக்கு வெளியே நடந்த மக்கள் போராட்டங்களால் மகிந்தவும் கோத்தாவும் அகற்றப்பட்டிருக்கிறார்கள். எனவே ஒரு புதிய ஜனாதிபதிக்கான தேவை யாப்பின் பிரகாரம் ஏற்படவில்லை.யாப்புக்கு வெளியே நிகழ்ந்த போராட்டங்களின் விளைவாகத்தான் ஏற்பட்டன.
இவ்வாறு யாப்புக்கு வெளியே போராடிய மக்கள் ரணிலையும் போக வேண்டும் என்று கேட்கிறார்கள்.ஏனென்றால் ரணில் இடையே குறுக்கிடாமல் விட்டிருந்தால் கோத்தா எப்பொழுது வெளியே போய் இருப்பார்.மக்கள் போராட்டத்தின் வேகத்தை தடுத்தது ரணில்தான். மக்கள் போராட்டத்தை திசை திருப்பி அதன் கனிகளை தன்னுடைய பொக்கற்றுக்குள் போட்டுக் கொண்டதும் ரணில்தான்.யாப்புக்கு வெளியே நடந்த மாற்றங்களை யாப்புக்குள் முடக்கியது ரணில்தான்.ரணில் பதில் ஜனாதிபதியாக வந்தது,இப்பொழுது இடைக்கால ஜனாதிபதியாகப் போட்டியிடுவது எல்லாமே யாப்புக்கு உட்பட்டவைத்தான்
எனவே ரணிலை அகற்றினால்தான் போராட்டம் முழுமை அடையும் என்று கோட்டா கோகம மற்றும் அரகலிய ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள். போராட்டத்தை திசை திருப்பவும் நீர்த்துப்போகச் செய்யவும் ராஜபக்சக்கள் கண்டுபிடித்த கருவிதான் ரணில் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதில் உண்மை உண்டு. தென்னிலங்கையில் போராடும் மக்கள் கேட்கும் சிஸ்டம் சேஞ்ச் அதாவது சிஸ்டத்தில் மாற்றம் என்ற கோரிக்கையில் இக்கட்டுரைக்கு கேள்விகள் உண்டு. ஆனால் அவர்கள் மேலோட்டமாகவேனும் விளங்கி வைத்திருப்பதன்படி அவர்கள் மாற்ற நினைக்கும் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதைத்தான் இருபதாம் தேதி நடக்கவிருக்கும் வாக்கெடுப்புக்கு முந்திய நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன. ஏனென்றால் அதில் யார் போட்டியிடுகிறார்கள்? எந்த அடிப்படையில் போட்டியிடுகிறார்கள்? யார் யாருடன் எந்த அடிப்படையில் கூட்டு சேரப் போகிறார்கள்? யார் யாரை இயக்குகிறார்கள்?யார்யார் பேரம் பேசுகிறார்கள்? எங்கெங்கே டீல்கள் நடக்கின்றன? என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் சிஸ்டம் மாறவே இல்லை. ஆட்களும் மாறவே இல்லை. அரசியல் கலாச்சாரம் மாறுவேயில்லை.அதே கட்சிகள், அதே தலைவர்கள், அதே பேராசைகள் ,அதே பேரங்கள். ஒரு மாற்றமும் இல்லை. வரும் இருபதாம் தேதி மட்டுமல்ல, அதன் பின் வரக்கூடிய ஒரு பொதுத் தேர்தலின்போதும் நிலமை அப்படித்தான் இருக்குமானால்,அது ஒரு அடிப்படை தோல்வி.
மே மாதம் ஒன்பதாம் திகதியும் ஜூலை மாதம் ஒன்பதாம் திகதியும் நடந்த சம்பவங்கள் மக்களுடைய கோபம் எப்படி இருக்கும் என்பதை நிரூபித்துள்ளன. அவ்வாறான மக்களின் கூட்டுக் கோபத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் பயப்படுகிறார்கள். ஆனால் இந்தப்பயம் மட்டும் சிஸ்டத்தை மாற்றுவதற்கு போதாது. அதற்குமப்பால் மக்கள் எழுச்சிகளின் விளைவுகளை அமைப்பாக்கம் செய்வதில்தான் குறைந்தபட்சம் சிஸ்டத்திலாவது மாற்றத்தைத் தொடக்கலாம் என்பதைத்தான், நடப்பு நிலைமைகள் உணர்த்துகின்றனவா?