இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர்.
இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
“என்னைப் பொறுத்தவரையில் ஒரு கூட்டு தீர்மானம் எடுத்தால் அதன் பொறுப்பு முழுமையாக தீர்மானம் எடுத்த அத்தனை பேரையும் சாரும்.
அந்த பொறுப்பை எடுக்க மறுப்பவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். அந்த பொறுப்பை நான் தனியே சுமக்க நேரிட்டாலும் அதற்கும் நான் தயார். எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது.
எனினும் சில உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் போது ரணிலுக்கு வாக்களிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரனின் முகநூல் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.