போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு கங்காராமை விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாரை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் நடப்பு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு கூறினார்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் ராஜபக்சக்களுக்கு எதிராகவே செயற்பட்டுள்ளேன். எனவே, அவர்கள் எப்படி எனது நண்பர்களாவார்கள்? நான் மக்களின் நண்பன். எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசியல் முறைமையை மாற்றி, அனைத்துக்கட்சிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படவே எதிர்பார்க்கின்றேன். இளைஞர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது. எதிர்ப்பு அரசியலை நடத்தினால் அது நாட்டுக்குதான் தீங்காக அமையும்.
அதேவேளை, தற்போதைய முறைமைக்கு (சிஸ்டம்) எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எல்லா துறைகளிலும் மாற்றம் கோரப்படுகின்றது.
அமைதியாக போராடுபவர்களுக்கு, அதற்கான பரப்புரைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். மௌனமாக இருப்பவர்களின் யோசனைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.
எனினும், போராட்டம் என்ற போர்வையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், வீடுகளை எரிப்பதற்கும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றை கைப்பற்றுவது ஜனநாயகம் அல்ல. அது சட்டவிரோத நடவடிக்கை.
அவ்வாறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.