காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படவேண்டும், இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும், சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது. பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைதிப் போராட்டத்திற்கான மக்களின் உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.