காலி முகத்திடல் போராட்ட களத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் சட்ட திணைக்களம் ஆய்வு செய்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்காக போராட்ட இடத்திற்குச் செல்லும் போது, போராட்ட இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட காணொளி காட்சிகளும், பொலிஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் பல காணொளிக் காட்சிகளும் தங்களிடம் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணொளிகளை ஆதாரமாக வைத்து வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.