இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் கூட்டுத் திட்டமான ‘கலாசாரத்தின் ஊடான தொடர்பு’ என்ற தலைப்பில் இந்திய மென் சக்தியின் பல்வேறு அம்சங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
தலைநகர் டில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்ற இந்த விழாவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மொத்தம் 23 கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே மற்றும் செயலாளர் சச்சிதானந்த் ஜோஷி ஆகியோர் கூட்டாகத் தொகுத்துள்ளனர்.
இந்திய இதிகாசங்கள், ஆயுர்வேதம், இந்திய நடனம், உணவு வகைகள் உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது. இது இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் இந்தியாவின் மென்மையான சக்தியின் கூறுகள் பற்றி பேசுவதாக உள்ளது.
இந்த தொகுப்பில் உள்ள ஒரு பகுதியானது இந்தியாவின், நாயகர்களான கௌதம புத்தர், ஸ்ரீ குருநானக், சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் பற்றிக் கூறுகின்றது.
புகழ்பெற்ற எழுத்தாளர் அமிஷ் திரிபாதி, ஆராய்ச்சியாளர் புஷ்பேஷ் பந்த், ஜெயா ஜெட்லி, கிறிஸ்டோபர் பென்னிங்கர், கபில் கபூர் மற்றும் காந்திய சிந்தனையாளர் ராஜீவ் வோரா ஆகியோர் இந்த தொகுப்பில் பங்களித்துள்ளனர்.
நூலின் ஆசிரியர் இரட்டையர்களான வினய் சஹஸ்ரபுத்தே மற்றும் சச்சிதானந்த் ஜோஷ்.’இந்தியாவின் பாரம்பரிய அறிவு, நமது உலகக் கண்ணோட்டத்தின் தத்துவ அடித்தளங்கள் மற்றும் துடிப்பான கலைகள் மூலம் வெளிப்படும் இந்தியா பற்றிய கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட ஆதாரத்தை உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் பின்னணியில் உள்ளது’ என்கின்றனர்.