இந்த நூற்றாண்டில் பிரித்தானியா, உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைத்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
42 வயதான முன்னாள் திறைசேரியின் தலைவரான ரிஷி சுனக், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சீன தொழில்நுட்ப ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்காத்துக் கொள்ள சுதந்திர நாடுகளின் புதிய நேட்டோ- பாணி சர்வதேச இராணுவக் கூட்டணியை உருவாக்குவது உட்பட, அவர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான திட்டங்களை முன்வைத்துள்ளார்.
இந்த புதிய பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக, இணைய பாதுகாப்பு, தொலைத்தொடர்பு பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்து திருட்டைத் தடுப்பதில் சர்வதேச தரங்கள் மற்றும் விதிமுறைகளை பாதிக்கும் முயற்சிகளை பிரித்தானியா ஒருங்கிணைக்கும் என்றும் அவர் கூறினார்.
‘Ready4Rishi’ பிரச்சாரத்தின் போது, பிரித்தானியாவில் உள்ள 30 சீனாவின் கன்பூசியஸ் நிறுவனங்களையும் மூடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வளரும் நாடுகளை சமாளிக்க முடியாத கடனில் மூழ்கடித்து, இதைப் பயன்படுத்தி அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதாகவும் சீனாவை அவர் குற்றஞ்சாட்டினார்.