ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், நான்கு பேர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி நஸீப் கான் தெரிவித்துள்ளார்.
தற்போது காபூலில் நடைபெற்றுவரும் ஷ்பகீசா ரி-20 கிரிக்கெட் லீக் கிரிக்கெட் தொடரின், பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சால்மி அணிகளுக்கு இடையிலான நேற்றைய (வெள்ளிக்கிழமை) போட்டியின் போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்களில், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், குண்டு வெடித்ததும் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்கள் பெரும்பாலானவர்கள் பதற்றம் அடைந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்ததாகவும் நஸீப் கான் மேலும் தெரிவித்தார்.
காபூல் பொலிஸ்துறையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், ‘வெடிகுண்டு வெடித்ததால் போட்டி சிறிது நேரம் நின்றது. அப்பகுதியை சுத்தம் செய்த பிறகு, போட்டி மீண்டும் தொடங்கியது’ என தெரிவித்தார்.
முதற்கட்ட தகவலின்படி இது தற்கொலைப் படை தாக்குதல் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.