ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 2-0 என்ற கணக்கில், நியூஸிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.
எடின்பர்க் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, செப்மன் 83 ஓட்டங்களையும் பிரேஸ்வெல் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், கவின் மெய்ன் 2 விக்கெட்டுகளையும் ஹம்சா டாயிர், எவண்ஸ் மற்றும் கிறிஸ் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 255 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் க்ரீவ்ஸ் 37 ஓட்டங்களையும் ரீச்சி பெரிங்டன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் நீஷம் மற்றும் ரிப்போன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மைக்கேல் பிரெஸ்வல், பென் சியர்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் செப்மன் தெரிவுசெய்யப்பட்டார்.