மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 64 ஓட்டங்களையும் தினேஷ் கார்திக் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் ஒபேட் மெக்கொய், ஹோல்டர், அகீல் ஹொசைன் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்க 122 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷமாரா புரூக்ஸ் 20 ஓட்டங்களையும் கீமோ போல் ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங், அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட தினேஷ் கார்திக் தெரிவுசெய்யப்பட்டார்.