ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக மேற்குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். தூக்கிலிடப்பட்டபோது ஷோகிலாவுக்கு 25 வயது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை இரண்டு மடங்கு அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதால், அதிகாரிகள் தங்கள் மரண தண்டனையை கணிசமாக முடுக்கிவிட்டதாக நம்பப்படுகிறது.
மற்ற எந்த நாட்டையும் விட ஈரானில் அதிகமான பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதாக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன, அவர்களில் பெரும்பாலோர் தங்கள் கணவர்களைக் கொன்ற குற்றவாளிகள் என்று கருதப்படுகிறது.
மரணதண்டனை எண்ணிக்கை பற்றிய துல்லியமான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை, ஏனெனில் ஈரானிய அதிகாரிகள் இறந்த ஒவ்வொரு வழக்கையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதுகுறித்து ஈரானில் செயற்படும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தக் கொலைகள் எல்லாம் குடும்ப வன்முறைக் காரணமாக நடந்துள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் ஈரான் நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த ஆறு மாதத்தில் மட்டும் ஈரான் 250 பேரை தூக்கிலிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவில் ஈரான் பெண்கள் மரணத் தண்டனைக்கு உள்ளாகுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் இன, மத சிறுபான்மையினரான வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுகிறது என ஈரான் மனித உரிமைகள் அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி, ஈரானில் 2021ஆம் ஆண்டு மரண தண்டனைகளின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்புச் சபையும் மரண தண்டனைகளை ஈரான் அரசியல் அடக்குமுறையாகக் கையாள்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.