அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக நெருக்கடிகள் ஏற்பட்டபோது தான், தமது தவறான கொள்கைகளை உணர்ந்தனர். தாம் செல்லும் பாதையை மாற்றுவதற்கு முனைந்தனர்.
அதனால், ராஜபக்ஷக்கள் ‘யூ டேர்ன்’ எடுக்கும் போது நிலைமைகள் கையறு நிலைக்குச் சென்றுவிட்டன. இதனால் அவர்களால் பொதுமக்களின் எழுச்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்கவில்லை.
குறிப்பாக, சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்த ராஜபக்ஷக்கள் அந்த முடிவினை மாற்றி சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு கைகொடுத்தது அயல்நாடான இந்தியாவே. இந்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் நேரடியாகவே இலங்கை அரச தரப்பினருக்கும், சர்வதேச நாணயப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச நாணயநிதியத்தின் கடனைப் பெறுவதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. எனினும், தற்போது வரையில் அந்தக் கடனைப் பெறுவதற்கு முழுமையான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை.
குறிப்பாக, உள்நாட்டில் காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற நிலையால் நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க முடியாதவொரு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களைப் பெறுவதற்கு மற்றுமொரு சிக்கலான நிலைமைகள் ஏற்பட்டிருகின்றன. அது தான், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய கடன்கள்.
ஒப்பீட்டளவில் சீனா இலங்கைக்கு பாரிய கடன்களை வழங்கவில்லை என்று கூறிவந்தாலும், இலங்கையின் வகைதொகையின்றிய செலவீனத்திற்கு பாரிய கடன்களை வழங்கியது சீனா தான்.
அதனால், தான் இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருகின்றது. ஆனால் இவ்வறான சிக்கல் இலங்கை இருக்கும்போது சீனா அமைதியாகவே உள்ளது. மேலும் தனது கடன்களை எவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்றே சிந்திக்கின்றது.
இது தான், சீனாவின் ‘கடன்பொறி’ இராஜதந்திரம். உலகநாடுகள் பல, சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்றால் எவ்வாறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும் என்பதற்கு நல்லுதாரணமாக இலங்கையை குறிப்பிடுமளவிற்கு நிலைமைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, தற்போது இலங்கையில் நிலவுவதைப்போன்ற அமைதியின்மை நிலை கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு முன்னரான காலகட்டத்தில் பிரான்ஸ் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நிலவியதாகச் சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, மக்களின் ஆதரவின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும், வெகுவாக அதிகரித்துவந்த சமத்துவமின்மையுமே அதற்கான பிரதான காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கமொன்று சீராக இயங்காத பட்சத்தில் இலங்கையில் இடம்பெற்றுவருவதைப்போன்ற போராட்டங்கள் ஏனைய உலக நாடுகளிலும் எழுச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா எச்சரித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் இந்தியாவிற்கான விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து பைடன் நிர்வாகமும் இந்தியாவும் கவலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதா அரசியல் நெருக்கடிக்கு காரணமான தீர்மானங்களை இலங்கை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த பல மாதங்களாக இலங்கை மக்களிற்கு எவ்வாறு உதவி வழங்க முடியும் என்பது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நாங்கள் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் இந்தியா உண்மையில் விரைவாக நடவடிக்கை எடுத்தது எனினும் சீனா, இலங்கைக்கான நிவாரணங்கள் தொடர்பில் உரிய பதில்களை வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் தற்போது புதிய விடயமொன்றை முன்வைத்துள்ளது. அதாவது, இலங்கை தமது இருதரப்பு கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் ரொயட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது, இந்த விடயத்தினைக் குறிப்பிட்டதுடன், இன்ஸ்டிடியூட் ஒஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் தரவுகளின்படி வங்கிக் கடன்கள் மற்றும் மத்திய வங்கி இடமாற்ற நிதி உட்பட வகையில் பீஜிங்கிற்கு இலங்கை சுமார் 6.5 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை சீனா பாரிய கடன் வழங்குநராக உள்ளது. எனவே மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சீனாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதோடு, தமது கடனை நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கை சீனாவுடன் பேசவேண்டும் என்று கோரியுள்ள கோரியுள்ளார்.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ப்யர் ஒலிவியர் கொவ்ரிஞ்சாஸ், இலங்கைக்கு தாம் நிதி உதவி வழங்குவதற்கு முன்னர், இலங்கை அதன் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளது. புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்திவருகின்றோம். எனினும் சீனா உள்ளிட்ட கடனாளிகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடத்தில் தான் இலங்கைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. தற்போது சீனாவிடத்திலிருந்து 4 பில்லியன் டொலர்கள் கடன்களை பெறுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ராஜபக்ஷவினரின் விசுவாசிகளில் ஒருவரான பீஜிங்கிலுள்ள இலங்கை தூதுவர் பாலித கொஹொன்ன குறிப்பிடுகின்றார்.
ஆனால், பீஜிங்கைப் பொறுத்தவரையில் பீஜிங் இலங்கைக்கு ஒருசதமேனும் கடன்வழங்குவதற்கு தற்போதைய நிலையில் தயாராக இல்லை. ஏற்கனவே அந்த நாடு வழங்கிய கடன்களை மீளப்பெறுவது பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.
இதனை சீன வெளிவிவகார துறையின் பேச்சாளர் சாவோ லிஜியனே ஏற்றுக்கொண்டுள்ளார். அவர், இலங்கைக்கு கடன்வழங்கியமை பற்றி குறிப்பிடும்போது,
‘சர்வதேச கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதாக இலங்கை அறிவித்த சிறிது நேரத்திலேயே சீன நிதி நிறுவனங்கள் இலங்கை தரப்பை அணுகியதுடன் சீனா தொடர்பான முதிர்ச்சியடைந்த கடன்களை கையாள்வதற்கும் சரியான வழியை கண்டறியவும் தயார் நிலையை காட்டினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்றானது, தமது கடன்களை எவ்வாறு மீளப்பெறமுடியும் என்பதை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கையின் உள்ளக நிலைமைகளை ஆராய்ந்துள்ள ஃபிட்ச் தரப்படுத்தல், சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன் காரணமாக, அதனுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சிக்கலாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆக, இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்கள் தற்போது அதன் எதிர்காலத்தினையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
-யே.பெனிற்லஸ்-