சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கடிதம் ஒன்றை அனுப்பிய போதிலும், அதில் சர்வகட்சி அரசாங்கம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார்.
ஜனாதிபதியின் கடிதம் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் இளைஞர்களை கைது செய்வதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குமான திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை ஜனாதிபதி பெற்றிருந்தாலும், அந்த கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடிக்கு நேரடியாகப் பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் காப்பாற்றப்படும் சூழலில் இளைஞர்கள் மட்டும் அரசாங்கத்தால் குறிவைக்கப்படுவதாக சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.