தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு நேற்று(புதன்கிழமை) அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்வதால், முன்னேற்றம் குறித்து அறிக்கையிடுவதற்கான திகதியை வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், விசாரணைகளின் முன்னேற்றத்தை அன்றைய தினம் தெரிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த வருடம் ஜுன் மாதம் தீ விபத்துக்குள்ளாகியிருந்தது.
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக 473 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.
இதற்கமைய குறித்த பாதிப்புகளால் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.