பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடரின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டுத் தொடர் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை யுப்புன் அபேகோன் பதிவுசெய்தார்.
அத்துடன் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் ஒன்று கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்த ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், கென்ய வீரர் பேர்டினண்ட் ஒமன்யாலா 10.02 செக்கன்களில் நிறைவு செய்து தங்கபதக்கத்தை வென்றார்.
இவரையடுத்து, தென்னாபிரிக்க வீரர் அக்கானி சிம்பைன் 10.13 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அதேபோல, பரா மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான கு 42-44/61-64 பிரிவு தட்டெறிதல் போட்டியில், எஃப்.42-44 பிரிவில் பங்குபற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி எச்.ஜீ. பாலித்த, 44.20 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.