ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இடைக்கால குழுக்களை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதே பிரதான இலக்கு என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு அனைத்து கட்சிகளின் பிரதிநிதித்துவமும் ஏனைய கட்சிகளின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதா, இல்லை என்றால் அரசாங்கத்துடன் இணைவதா என்பது குறித்து அந்தந்த கட்சிகளே முடிவு செய்ய வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.