கொவிட் தொற்றுநோய்களின் போது வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், காய்ச்சலால் அவதிப்பட்டார் என அவரது சகோதரியும், சக்திவாய்ந்த மூத்த அதிகாரியுமான கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.
இது தென்கொரியாவால் எல்லைப் பகுதியில் கொட்டப்படும் மாசுபடுத்தப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் பலூன்கள் ஆகியவற்றால் பரவியதாக கிம் யோ ஜோங் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், இந்த கூற்றுகளை ஆதாரமற்றறு என கூறி தென் கொரியா நிராகரித்துள்ளது.
எனினும், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கொவிட்டுக்கு எதிரான நாட்டின் போரில் அவரது சகோதரர் வெற்றி பெற்றதாக கிம் யோ ஜோங் தெரிவித்தார்.
உலக நாடுகளின் மத்தியில் இரகசிய நாடாக பார்க்கப்படும் வடகொரியா, மே மாதத்தில் அதன் முதல் கொவிட் தொற்றை பதிவுசெய்தது.
இதுவரை ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து 4.8 மில்லியன் நோய்த்தொற்றுகள் இருப்பதாகக் கூறும் வடகொரியா, வெறும் 74 வைரஸ் இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றது.
இது 0.002 சதவீதம் இறப்பு வீதம். இது உலகின் மிகக் குறைவான இறப்பு வீதமாகும். ஆனால் தரவுகளில் பரவலான சந்தேகம் உள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சில தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் கோவிட் சிகிச்சை மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் இல்லாத உலகின் மிக மோசமான சுகாதார அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் வடகொரியாவில் இது எப்படி சாத்தியம் என பல வல்லுநர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஆனால், ‘சாதகமான கொரிய பாணி சோசலிச அமைப்பு’ என்று அழைக்கப்படும் முடக்கநிலை கட்டுப்பாடுகள், உள்நாட்டு சிகிச்சைகள் மூலம் இது சாத்தியமானதாக வடகொரியா தெரிவிக்கின்றது.