இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக இந்தியாவின் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
மீன்பிடி படகுகளில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் மற்றும் ஏராளமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியும், இலங்கையைச் சேர்ந்தவருமான ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையின்போது கேரள உயர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. விசாரணை அமைப்பு அறிக்கை தாக்கல் செய்தது.
2021 மார்ச் 18 அன்று லட்சத்தீவின் மினிகாய் தீவுக்கு அருகில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பயணித்த ‘ரவிஹன்சி’ என்ற படகை இந்திய கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்தியபோது இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்று கூறப்படும் ஏழாவது மற்றும் அவரது சகோதரர் மற்றும் எட்டாவது குற்றவாளிகள் காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரான ரமேஷ், விசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பதை ஒப்புக்கொண்டார்.
ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புக்களில் இருந்தவர்கள் என்றும் இந்த சட்டவிரோத கடத்தல் மூலம் பணம் திரட்டி வந்ததாகவும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் பிணை மனுவை நிராகரித்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.