தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு முதல்முறையாக நடைபெறும் ரி-20 கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள ஜோகனஸ்பர்க் சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும், முதல் ஐந்து முதன்மை வீரர்களின் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாகவே அணியின் தலைவராக தென்னாபிரிக்காவின் டு பிளெஸிஸ் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் மொயின் அலி நான்கு இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்னமும் மூன்று வீரர்களை ஏலம் இல்லாமல் நேரடியாக ஒப்பந்தம் செய்வதற்கான விருப்பம் இருந்த நிலையில், அந்த வீரர்களையும் நேற்று அணி நிர்வாகம் இறுதி செய்தது.
இதன்படி, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவை இரண்டு இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர் ரொமாறியோ செப்பர்ட்டை ஒரு இலட்சத்து 75ஆயிரம் டொலர்களுக்கும் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை ஐம்பதாயிரம் டொலர்களுக்கும் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.
இதுதவிர அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங்கும், துணைப் பயிற்சியாளராக எரிக் சிமண்சும் செயற்படவுள்ளனர். அத்துடன் பயிற்சியாளர்கள் குழுவில் அல்பி மோர்கலும் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். ரி-20 தொடரில் இடம்பெற்றுள்ள சம்பியன் அணியான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, ஜோகனஸ்பர்க் சுப்பர் கிங்ஸ் அணியை வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.