சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
ஹராரே மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுபெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 40.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சகப்வா 35 ஓட்டங்களையும் ங்கறவ 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தீபக் சஹார், பிரசீத் கிருஸ்னா மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 30.5 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் சார்பாக ஷிகர் தவான் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் சுப்மான் கில் ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை சாய்த்த தீபக் சஹார், தெரிவுசெய்யப்பட்டார்.