நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
ரோட்டர்டாம் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 44.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாஸ் டி லீடே 89 ஓட்டங்களையும் டொம் கூப்பர் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப் மற்றும் நவாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நஸீம் ஷா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் வசிம் மற்றும் சதாப்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 33.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பாபர் அசாம் 57 ஓட்டங்களையும் அகா சல்மான் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், விவியன் கிங்மா 2 விக்கெட்டுகளையும் ஆர்யன் துத் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நவாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.